Sunday, September 26, 2010

எந்திரனால் வந்த நெருக்கடி...




        ‘உற்சவம் வரும்வரை சாமியும் கருவறையில்தான், தேரும் தெருவரைதான்’ என்ற நிலையில் உள்ளனவாம் தற்போது வெளியாகவிருக்கும் சில தமிழ்ப் படங்கள். 

‘எந்திரன்’ இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அக்டோபர் 1ல் வெளியாகிறது. 

அந்தவகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என்றப் பெருமையை பெற்றுள்ளது எந்திரன். 

உலகமெங்கும் எதிர்பார்த்த ஒரு படம் வெளியாகிறது என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், எந்திரன் வெளியாவதில் சில வருத்தங்களும் இல்லாமல் இல்லை.

பொதுவாகவே, எந்த ஒரு பெரிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்போ, அல்லது வெளியான சிலதினங்களுக்குப் பின்போதான் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். இது வழக்கம்தான். என்றாலும், மற்ற மொழிப் படங்களைவிட தமிழ் படங்களுக்கு இந்த நெருக்கடி ரொம்பவே அதிகம்தான். 

அதிலும் எந்திரன் படவெளியீட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் படங்கள் கொஞ்சம் ஏராளம்தானாம்... 


ஆரம்பத்தில் எந்திரன் எப்போது வெளியாகும் என்பது எவருக்கும் தெரியாத மர்ம நாவலாக இருந்து வந்தது. அந்தா இந்தா என்று செப்படம்பர் 24ந் தேதி எந்திரன் ரிலீஸ் என எந்திரன் படக்குழு முதலில் வெளியிட்டது. ஆனால் அதன்பிறகு வந்த சில தகவல்கள் எந்திரன் ரிலீஸ் தேதியை கன்னீத்தீவு கதையாக நீட்டித்துக்கொண்டிருந்தன. எப்படியோ ஒருவழியாக அக்டோபர் 1ல் எந்திரன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே இப்போது தெரிவிக்கப்பட்டுவிட்டது. 

செப்படம்பர் 24ந் தேதி வெளியாக வேண்டிய எந்திரன், அக்டோபர் 1ந்தேதி வரை தள்ளிப்போனதற்கான காரணமும் கொஞ்சம் காரசாரமாகவே உள்ளது.

ஆர்யா - நயன்தாரா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காகத்தான் எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டதாக சினிமாவட்டாரங்களில் கிசுகிசுக்கபட்டும் வருகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசன். ஆனாலும், உலகமெங்கும் படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.


ரெட் ஜெயண்ட் மூவிஸ் தரப்புக்கும், சன் பிக்சர்ஸ் தரப்புக்கும் நடந்த ஒருவாரகால பேச்சுவார்த்தையின் பலன்தான் எந்திரன் ரிலீஸின் காலதாமதம். (ஓ... பாஸுக்கு வழிவிட்டதா மாஸு)
 
என்னதான் எந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து, இப்போது பெற்றுவரும் வெற்றிக்கு கெடுவைத்துவிடுமே என்று வருத்தப்பட்டு வருகிறதாம் பாஸு டீம். இந்தப் படத்திற்கு ஏற்பட்ட நிலைதான் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கும்.

வெளியான படங்களைவிட வெளியாகப்போகும் படங்களுக்கும் அதேகதிதான். சிக்கு புக்கு, ஈசல், வ குவாட்டர் கட்டிங், சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, உள்ளம் தள்ளாடுதே, பட்டாபட்டி 50 - 50 மற்றும்  தனுஷ் நடித்த ஆடுகளம், சீடன் உட்பட 30 க்கும் மேற்பட்டப் படங்கள் எந்திரனால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருக்கின்றனவாம். 
 
எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களையும் ஜீரோ ஆக்கிய சின்னப் பட்ஜெட் படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் கணக்கின்றி உள்ளன. எண்பதுகளில் எடுத்து கொண்டால்...‘கரகாட்டக்காரன்’ படம் அப்போது வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் அத்தனையையும் ஓரங்கட்டியது. 

ஏன்...! ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படம் வெளியான போது,  புது முகங்கள் மட்டுமே நடித்த ‘மோனிஷா என் மோனோலிஷா’படம் வெளியாகி ஹிட்டும் ஆனது.

அதைவிட கடந்த ஆண்டுகளில் வெளியான சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, நாடோடிகள், ஈரம் போன்றப் படங்கள் பெரிய அளவில் விளம்பரங்கள் ஏதுமில்லாமலே அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களே தராத வெற்றியை மிகப்பெரிய அளவில் பெற்றன. பெரிய படம், சின்னப் படம் என்பது எல்லாம் பட்ஜெட்டில்தான். படத்தின் வெற்றியில் இல்லை...

என்னதான் மாஸ் படங்களுக்கு ஆரம்பத்தில் மவுசு இருந்தாலும், தரமான படங்கள்  மட்டும்தான் மக்கள் மனதில் இருக்கும்...

                           

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails