Wednesday, October 6, 2010

வாம்மா மின்னல்

உங்கள் குழந்தைக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா? அப்படியானால் ‘செக்ரிடேரியேட்: தி மேக்கிங் ஆஃப் எ சாம்பியன்’ நூலை வாசிக்கக் கொடுங்கள். நீங்கள் குழந்தையாக இருக்கையில் ஒருவேளை இந்தப் புத்தகத்தை வாசித்திருந்தீர்கள் என்றால், இந்நேரம் கோப்பையை கையில் ஏந்தியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருப்பீர்கள். ஆண்கள் என்றால் சிவப்பும், கறுப்புமான அழகிகளும், பெண்கள் என்றால் பேரழகன்களும் உங்களை சுற்றிச் சுற்றி வந்திருப்பார்கள்.
இத்தனைக்கும் இந்த நூல் எந்தவொரு விளையாட்டு வீரரின் சுயசரிதையும் அல்ல. பதிலாக ஒரு சிவப்பு குதிரையின் கதை. 1973ம் ஆண்டு வெற்றிக் கோட்டை இந்த ரேஸ் குதிரை கடந்தபோது டெலிடைமர் அலறியது. துல்லியமாக ஒரு நிமிடம், 59 விநாடிகளில் வெற்றி இலக்கை அடைந்து மூச்சு வாங்க நின்றது செக்ரிடேரியேட். ஆனால், இதைப் பார்த்தவர்களுக்குத்தான் மூச்சே நின்றது. சும்மாவா... எவ்வளவு பெரிய ரிக்கார்ட் பிரேக்? மூன்றே வயதான ஒரு குதிரையின் இந்த சாதனை அடுத்தடுத்த வருடங்களிலும் தொடர்ந்தது.

1970ம் ஆண்டு பிறந்து, 1989ம் ஆண்டு மறைந்த செக்ரிடேரியேட், சென்ற நூற்றாண்டின் அதிவேகமான புரவி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்தப் புரவியின் வளர்ச்சியைத்தான் இன்ச் பை இன்ச்சாக ‘செக்ரிடேரியேட்: தி மேக்கிங் ஆஃப் எ சாம்பியன்’ என்ற நூலாக எழுதியிருக்கிறார் வில்லியம் நாக். ‘‘நான் எழுதிய பக்கங்களை நுணுக்கமாக வாசித்ததன் அடையாளமாக செக்ரிடேரியேட், அந்தக் காகிதங்களை கடித்துக் குதறியது...’’ என்று பேட்டியளித்திருக்கிறார் இந்த அமெரிக்க பத்திரிகையாளர். இவருக்கு விளையாட்டு, அரசியல், சுற்றுச்சூழலில் ஆர்வம் உண்டு. ஆனால், பெயர் வாங்கிக் கொடுத்து மூன்று வேளையும் சோறு போட்டது, போடுவது என்னவோ விளையாட்டு விமர்சனங்கள்தான்.

நம்பிக்கை, உற்சாகம், பயிற்சி, உத்வேகம், தோல்வி கண்டு கலங்காமை, இலக்கை நோக்கி சீறும் பாய்ச்சல்... என கலவையான உணர்வை கொத்து பரோட்டாவாக அளிக்கும் இந்த நூலை மையமாக வைத்துத்தான் ‘செக்ரிடேரியேட்’ ஹாலிவுட் படம் தயாராகியிருக்கிறது. பிள்ளையார் சுழி போட்டது முதல் பூசணிக்காய் உடைத்தது வரை பட வேலைகள் அனைத்திலும் உடனிருந்து ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் வில்லியம் நாக். தந்தை இறக்கும்போது பென்னி, இளவயது மங்கை. வறுமைதான் வாழ்க்கையின் அடையாளமாக இருக்கிறது. நொடிந்துப் போன குதிரைப் பண்ணையை வைத்து இனி ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், புரவிப் பண்ணையில் இருக்கும் எஞ்சிய குதிரைகளை விற்க பென்னிக்கு மனமில்லை. அதுதான், அது மட்டும்தான் அப்பாவின் சொத்து.

அந்தநேரத்தில் அவளிடம் வந்து சேருகிறது சிவப்பு நிற செக்ரிடேரியேட். தன் வாழ்க்கையை உயர்த்தப் போகும் ஜீவன் அது என்பது பென்னிக்கு அப்போது புரியவில்லை. அதன் நீளமான கால்களும், எந்நேரமும் சிலிர்க்கும் அதன் இயல்பும் பென்னியை கவர்கிறது. பயிற்சியாளர்கள் மூலம் அதற்கு பயிற்சியளிக்கிறாள். போட்டியில் கலந்து கொள்கிறாள். அவளது வாழ்க்கையை செக்ரிடேரியேட் எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு தொடர்பான படங்களுக்கு திரைக்கதை எழுதுவதில் வல்லவரான மைக் ரிச், இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். ‘பிரேவ் ஹார்ட்’ படத்துக்கு திரைக்கதை எழுதி விருதுகளை அள்ளிக்குவித்த ரான்டல் வாலஸ், இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘அன்ஃபெய்த்புல்’ படத்துக்காக அகடமி, கோல்டன் க்ளோப் விருதுகளை வென்ற, டயானா லேன், இப்படத்தில் பென்னியாக நடித்திருக்கிறார். அடுத்தவாரம் உலகெங்கும் ‘செக்ரிடேரியேட்’ பாய்ந்து வரப் போகிறது. வாம்மா மின்னல்...

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails