Saturday, October 23, 2010

ஷங்க‌ரின் தடாலடி முடிவு - ச‌ரிகிறதா சினிமா சாம்ரா‌ஜ்யம்?

ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடைய‌ச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது.

இந்த இரண்டில் எது உண்மை என்பதை ஆராய்வதல்ல நம் நோக்கம். இப்படியொரு பிரச்சனை எதனால் கிளம்பியது என்பதே இன்றைய கவலைதரும் விஷயம்.

காதல், வெயில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, ஈரம் போன்ற நல்ல பல சினிமாக்கள் தமிழில் வரக் காரணமாக இருந்ததும், பாலா‌ஜி சக்திவேல், வசந்தபாலன், சிம்புதேவன் போன்ற இயக்குனர்களை தமிழ் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியதும் ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ்தான்.

வெறும் வணிகப்படங்களை எடுக்கும் இயக்குனர் என ஷங்கரை ஒருவ‌ரியில் விமர்சிக்கும் தீவிர விமர்சகர்கள்கூட, தயா‌ரிப்பாளராக அவரை கொண்டாடுகிறார்கள். இதற்குக் காரணம் மாஸ் ஹீரோக்களின் பின்னால் ஓடாமல் கதையை நம்பி வரும் அறிமுக இயக்குனர்களுக்கு அவர் ஆதரவளிப்பதுதான். அப்படி அவர் தயா‌ரித்தப் படங்கள் இன்றைய தமிழ் திரையுலகின் அடையாளங்களாகவும் மாறியிருக்கின்றன.

ஷங்க‌ரின் தயா‌ரிப்பில் கடைசியாக வந்த ரெட்டச்சுழியும், ஆனந்தபுரத்து வீடும் ச‌ரியாகப் போகவில்லை. இத்தனைக்கும் இவை மோசமான திரைப்படங்கள் என்ற வகைமாதி‌ரிக்குள் அடங்குபவை அல்ல. வன்முறை, ஆபாசம் தவிர்த்து எடுக்கப்பட்ட நேர்மறை படங்கள்தான் இவை இரண்டும். என்றாலும் திரைக்கதையின் தொய்வு காரணமாக ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டவை.

இந்த இரு படங்களால் மட்டும் ஏறக்குறைய ஆறு கோடிக்கு மேல் எஸ் பிக்சர்ஸுக்கு நஷ்டம் என்கிறார்கள். ஷங்கர் தயா‌ரிப்புக்கு முழுக்குப் போடுகிறார் என்ற தகவல் பரவ‌க் காரணமாக இருந்தது இந்த நஷ்டக் கணக்கே.

ஷங்கரைப் போல தரமான படங்களை மட்டுமே தருவது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் இன்னொரு நிறுவனம் மோசர் பேர். இவர்கள் தயா‌ரித்த அனேகமாக அனைத்துப் படங்களுமே வசூல்‌ ‌ரீதியாக தோல்விப் படங்களே. பூ, ராமன் தேடிய சீதை போன்ற படங்களும்கூட பெ‌ரிதாக லாபம் ஈட்டவில்லை.


பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் தயா‌ரித்த படங்களில் மொழி தவிர்த்து அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலை தராதவை. அதேநேரம் அவர் தயா‌ரித்த அழகிய தீயே, தயா, அபியும் நானும், வெள்ளித்திரை தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இனிது இனிது என அனைத்துமே நல்ல முயற்சிகள். சதையை நம்பாமல் கதையை நம்பி எடுக்கப்பட்ட பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்.

மேலே உள்ள நிறுவனங்கள் அனைத்துமே ஓரளவு தரமான படங்களையே தயா‌ரித்துள்ளன. பல நேரம் மிகப் பிரமாதமான படங்களை. ஆனால் அதன் விளைவு எப்படிப்பட்டது?

மோசர் பேர் நிறுவனம் நஷ்டத்தை தாங்க முடியாமல் தயா‌ரிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அது தயா‌ரித்த மயிலு படம் பல காலமாக பெட்டிக்குள் முடங்கியுள்ளது. டூயட் மூவிஸ் தனது தயா‌ரிப்பு எல்லையை பெருமளவு சுருக்கியுள்ளது. ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளது எஸ் பிக்சர்ஸும்.

தரமான படங்களை தர விரும்பும் கம்பெனிகளின் இந்த நிலை மிகவும் கவலையளிக்கும் ஒரு அம்சம். இந்த தோல்வியும், நஷ்டமும் தொடர்ந்தால் நாளை ஒரு ப‌ரிசோதனைப் படத்துக்கான அத்தனை வழிகளும் ஒரு படைப்பாளிக்கு மூடப்படலாம்.

தயா‌ரிப்பு பற்றி தெ‌ரியாமல் மாட்டிக் கொண்டவர்கள் என இவர்களை சொல்ல முடியாது. அப்படியானால் இவர்களின் தோல்விக்கு என்ன காரணம்?

ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரும் யோசிக்க வேண்டிய கேள்வி இது. இதற்கான பதில் மேலும் பல காதல், வெயில் போன்ற படங்களையும், பாலா‌ஜி சக்திவேல், சிம்புதேவன் போன்ற இயக்குனர்களையும் தமிழுக்கு தரக்கூடும்

3 comments:

Anonymous said...

For more interesting updates visit cinema news

Anonymous said...

Thanks for sharing this information with us and it a Wonderful blog. Tamil Cinema News
Cinema News in Tamil
Kollywood News in Tamil
Latest OTT Updates
Latest Tamil Movie Reviews
Latest Hollywood News

Aradhya on April 30, 2023 at 9:20 AM said...

Tamil Cinema News

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails